பெண் உடன் பழக்கம்? கால்வாயில் வீசப்பட்ட திண்டுக்கல் பாஜக நிர்வாகி உடல்.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லை : கால்வாய் ஒன்றில், வாலிபர் ஒருவரின் உடல் கிடந்த நிலையில், அது பற்றி விசாரணையில் ஈடுபட்ட போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது.
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம், கண்டித்தான்குளம் மூகாம்பிகை நகர் அருகேயுள்ள கால்வாயில், நேற்று காலை, சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் மிதந்துள்ளது.
இது பற்றி, பொது மக்கள் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த முன்னீர்பள்ளம் போலீசார், உடலைக் கைப்பற்றி, விசாரணையை மேற்கொண்டனர். அதே போல, கால்வாயில் கிடந்த உடலில், வெட்டுக் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கால்வாயில் உடல்
இதனால், அந்த வாலிபரை, யாராவது தீர்த்துக் கட்டி, இங்கே வீசிச் சென்றிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த அந்த நபர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை அடுத்த அக்கமநாயக்கனூரைச் சேர்ந்த செந்தில் குமார் (வயது 37) என்பது தெரிய வந்தது.
மேலும், இவர் ஒன்றிய பாஜக வர்த்தக அணி துணைத் தலைவர் என்பதும், அப்பகுதியில் இரு சொகுசு கார்களை வைத்து, டிராவல்ஸ் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. செந்தில்குமாரின் மனைவி மனைவி பெயர் தனலட்சுமி. இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பேஸ்புக் மூலம் பழக்கம்
செந்தில்குமாருக்கு, பேஸ்புக் மூலம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 22 வயது இளம் பெண்ணுக்கு, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பெயரில், அந்த இளம் பெண்ணும், செந்தில் குமாரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இது பற்றி, இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வரவே, அவர்கள் செந்தில் குமாரை கண்டித்துள்ளனர். ஆனாலும், அதை பற்றி கவலை கொள்ளாத செந்தில்குமார், தொடர்ந்து அந்த இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
வாடகை கார் வேண்டும்
இதனால், ஆத்திரம் அடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள், செந்தில்குமாரை போட்டுத் தள்ள திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், ஈரோடு பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த சிலர், செந்தில்குமாரை அழைத்து, நெல்லைக்குச் செல்ல வாடகை கார் வேண்டும் என கூறியுள்ளனர்.
தான் நெல்லை வரை சவாரி செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு, செந்தில்குமார் புறப்பட்டுள்ளார். பின்னர், ஈரோட்டிற்கு சென்று, விடுதியில் இருந்த சுமார் 5 பேரை ஏற்றிக் கொண்டு, நெல்லைக்கு செந்தில்குமார் சென்றதாகவும் கூறப்படுகிறது. செந்தில்குமாரின் உதவியாளர் ஒருவரும், வழியில் வைத்து காரில் ஏறிக் கொண்டார்.
காரில் கடத்தல்
இதனைத் தொடர்ந்து, அந்த உதவியாளரை தூத்துகுடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள பகுதியில், திடீரென காரில் இருந்த 5 பேரும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, காரில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். பின்னர், அந்த 5 பேர் கும்பல், செந்தில்குமாரை நெல்லை முன்னீர்பள்ளம் அருகேயுள்ள பகுதிக்கு, காரில் கடத்திக் கொண்டு வந்துள்ளனர்.
போலீஸ் நிலையத்தில் புகார்
பின்னர், அவர்கள் திட்டம் போட்ட படியே, செந்தில்குமாரை தீர்த்துக் கட்டி விட்டு, உடலைக் கயிற்றால் கட்டி, கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே, உதவியாளர் ஸ்ரீனிவாசன், செந்தில்குமார் மனைவியிடம் தகவலைத் தெரிவிக்க, அவரும் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அடையாளம் காட்டிய மனைவி
இதனையடுத்து, நேற்று இரவு செந்தில்குமார் மனைவியை அழைத்து வந்த போலீசார், கால்வாயில் கிடந்த உடலைக் காட்டிய போது, அது தன்னுடைய கணவர் தான் என்பதை அவர் உறுதி செய்தார். செந்தில்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக, செந்தில்குமாரை கடத்திய கும்பல், கைது செய்யப்பட்ட பின்னரே முழு தகவல் தெரிய வரும் என போலீசார் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரல் ஆடியோ
இன்னொரு பக்கம்,வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், பெண் ஒருவர், செந்தில்குமார் குறித்து ஆபாசமாக பேசும் உரையாடல் ஒன்று வெளியாகி, வைரலாகியும் வருகிறது. உயிரிழந்த செந்தில் குமாருக்கும், அந்த பெண்ணிற்கும் உறவு இருந்து, பின் அதனால் பிரச்சனை எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், தொலைபேசி உரையாடல்களைக் கொண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், நெல்லை மாவட்டத்திலுள்ள கால்வாயில், மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.