'இந்த' டைம்க்கு மேல 'கோயம்பேடு' மார்க்கெட் வந்தா... 'பைக்கை' பறிமுதல் பண்ணிருவோம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 19, 2020 07:45 PM

தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்தில் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மண்டல கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு கண்காணிப்பு குழு அலுவலர்கள் டாக்டர் ராஜேந்திர குமார், மற்றும் அபாஷ் குமார் ஆகியோர் தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

Chennai Corporation Says Motorcycle will Seized in CMBT Market

கூட்டத்திற்கு பின் சிறு,குறு வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயம்பேட்டில் அமைந்துள்ள காய்கனி மற்றும் மலர்கள் அங்காடி வளாகப் பகுதி பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏற்கனவே மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு மட்டுமே கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் காய்கனி மற்றும் மலர்களை வாங்கிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளிலேயே காய்கனி வாங்க அறிவுறுத்தப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் வளாகப் பகுதியில் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்க்கெட் வளாக பகுதிக்கு காய்கனி மற்றும் மலர்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வருகை தரும் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் நாளை முதல் காலை 4.00 மணி முதல் காலை 7.30 மணிக்குள் தங்களுடைய வாகனங்களில் வந்து காய்கனி மற்றும் மலர்களை வாங்கி செல்ல வேண்டும். கோயம்பேடு காய்கறி அங்காடி வளாகத்தில் காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் வந்து காய்கனி, மலர்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க வரும் நபர்கள் எவருக்கும் அனுமதி இல்லை. இதை மீறி மார்க்கெட் வளாக பகுதிக்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.