ஆட்டிப்படைக்கும் 'கொரோனா' வைரஸ்க்கு எதிராக... 'வேப்பிலையைக்' கையில் எடுத்த மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வெகு வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தியா முழுவதும் 167 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 4 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் கோயமுத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகம் முன்பாக சாணம் தெளித்து, வேப்பிலை கட்டியுள்ளனர். ஊராட்சி அலுவலகம் மட்டுமின்றி கிராமத்தில் உள்ள வீடுகளிலும் தினமும் வீட்டு வாசல் முன்பாக சாணம் தெளித்து வேப்பிலை கட்டி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை வெயில் காலங்களில் அம்மை போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கும் பொருட்டு வேப்பிலை தோரணம் கட்டுதல், வீட்டு வாசல்களில் கால் கழுவ மஞ்சள் கலந்த தண்ணீரை வைத்தல், கையில் மஞ்சள் கிழங்கு காப்பு கட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த நடைமுறையை தற்போது கொரோனா வைரஸ்க்கு எதிராக கோவை மக்கள் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
