‘யாரும் பயப்படாதீங்க...’ 'சார்ஸ்'க்குப் பின் வரும் கரோனா... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் வேகமாகப் பரவும் மர்மகாய்ச்சலைத் தொடர்ந்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் கடந்த 2002-ம் ஆண்டு ‘சார்ஸ்’என்ற வைரஸ் கிருமி பரவியது. இந்த வைரஸ் கிருமி சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு வேகமாக பரவியது. சார்ஸ் வைரஸ் கிருமியால் ஏற்பட்ட மூச்சுக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் 8,422 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 916 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவின் உஹான் மாகாணத்தில் ‘கரோனா’ என்ற புதிய வைரஸ் கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 1,700-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரோனா வைரஸ் செயல்பாடுகள், சார்ஸ் வைரஸ் போன்றே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சார்ஸ் வைரஸால் ஏற்படும் மூச்சுப்பிரச்சினை, அதிக சளி, இருமல் போன்றவைதான் இதற்கும் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது “வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. யாரும் பயம் கொள்ள வேண்டாம்” என்று கூறினார்.
