‘நிவர் புயல் எதிரொலி’... ‘அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு’... ‘ தமிழக அரசு நடவடிக்கை’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படுவோர்களுக்கு உதவ அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் ‘நிவர்’ புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகலில், மகாபலிபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் 2 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தமிழக கரையை நோக்கி நிவர் புயல் நகர்ந்து வரும் நிலையில் மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அவசர உதவி எண்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மாநில அளவில் அவசர உதவி எண் 1070, மாவட்டங்கள் அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம்
மேலும் புயல் கரையை கடக்கும் போது திடீரென காற்றின் வேகம் குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம். புயல் கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.