சென்னையில் 'விறுவிறுப்பாக' உருவாக்கப்படும் குட்டி 'காடுகள்'!.. மாநகராட்சி 'அதிரடி' நடவடிக்கை!.. வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 'மியாவாக்கி' முறையில் குட்டி காடுகள் உருவாகி வருகின்றன. இவை மற்ற மரங்களை காட்டிலும் 10 மடங்கு வளர்ச்சியும், 30 மடங்கு அடர்த்தியும் கொண்டவையாக இருக்கும். மேலும் நீர்நிலையோரங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது.
மரங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில், குறைந்த பரப்பளவு நிலத்தில் அதிக மரக்கன்றுகளை மிக நெருக்கமாக நட்டு சிறிய காடுகளை உருவாக்கும் முறையான 'மியாவாக்கி' காடு வளர்ப்பு முறையை அறிமுகப்படுத்தினார், ஜப்பான் நாட்டை சேர்ந்த தாவரவியலாளர் அகிரா 'மியாவாக்கி'. இந்நிலையில், சென்னையிலும் 'மியாவாக்கி' திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-
சென்னையின் மண்வளம், நீர்வளம், சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க 'மியாவாக்கி' முறையில் அடர் காடுகளை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி சென்னையில் அடையாறு, வளசரவாக்கம், முகலிவாக்கம் ஆகிய 3 இடங்களில் அடர்வனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் அடையாறு காந்திநகர் கெனால் பேங்க் சாலையோரம் உள்ள (கோட்டூர்புரம் ரெயில் நிலையம் அருகே) ½ ஏக்கர் நிலப்பரப்பில் 'மியாவாக்கி' முறையில் 45 வகைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும், வளசரவாக்கத்தில் 20 சென்ட் நிலத்தில் 50 வகைகளில் 700-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும், முகலிவாக்கத்தில் 60 சென்ட் நிலத்தில் 50 வகைகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் நடப்பட்டு உள்ளன. இந்த மரங்கள் அனைத்துமே ஓங்கி உயரமாக வளரக்கூடியவை.
முதலில் தேர்வு செய்யப்பட்ட நிலப்பரப்பு முழுவதும் 3 அடி ஆழத்துக்கு குழி பறிக்கப்பட்டது. பின்னர் அங்கு தரமான, வளம் நிறைந்த மண் கொட்டப்பட்டது. பின்னர், வைக்கோல் கொண்டு அரை அடிக்கு மேடை போன்று அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மரக்கன்றுகள் நெருக்கமாக நடப்பட்டன.
மரக்கன்றுகள் நன்றாக வளர குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. மேலும், மாநகராட்சி மண்டலங்களில் உள்ள திடக்கழிவு மூலம் உரங்கள் தயாரிக்கும் நிலையங்களில் இருந்து உரங்கள் பெற்று பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர மண்ணின் தன்மை மாறாமல் இருக்க எரு உள்ளிட்ட இயற்கை உரங்களும் பயன்படுத்தப்படுகிறது.
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் இந்த மரங்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்து குட்டி காடுகள் போலவே காட்சியளிக்கும். 'மியாவாக்கி' முறையில் வளர்க்கப்படும் மரங்கள் (சுமார் 2 ஆயிரம் எண்ணிக்கையில்) ஆண்டுக்கு 11 டன் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொண்டு, 4 டன் ஆக்சிஜனை வழங்குகிறது. இவை சாதாரண மரங்களை விட 10 மடங்கு அதிக வளர்ச்சியும், 30 மடங்கு அதிக அடர்த்தியும் கொண்டதாக இருக்கும். இந்த மரங்களுக்கு முதல் 3 வருடங்களுக்கு பிறகு எந்தவொரு பராமரிப்பு பணிகளும் பெரிதும் தேவைப்படாது.
அடுத்தகட்டமாக புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும் 'மியாவாக்கி' முறை அடர் வனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கி இருக்கிறது. அதனைத்தொடர்ந்து மேலும் 5 இடங்களில் 'மியாவாக்கி' முறையில் அடர் வனங்கள் ஏற்படுத்தப்பட இருக்கிறது.
குட்டி காடுகள் உருவாக்க நடப்படும் மரங்கள் மூலமாக காய்கறி, பழங்கள் கிடைப்பதுடன் பூமியின் வெப்பமும் வெகுவாக குறையும். காற்றின் ஈரப்பதமும் தக்க வைக்கப்பட்டு மழை பொழிவும் அதிகரிக்கும். நகர்ப்புறத்துக்கு நடுவே அமைக்கப்படும் இந்த குட்டி காடுகளால் ஏராளமான நுண்ணுயிர்கள், பறவைகள், புழு-பூச்சிகள் பெருக்கம் இருக்கும். தேனீக்களின் நடமாட்டம் அதிகரிக்கும். இதன்மூலம் இந்த காடு இன்னும் செழிப்பாக காணப்படும். அதேபோல சென்னையில் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலையோரங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்காக திட்டமிடப்பட்டு அதற்கான நகர்வுகள் வேகவேகமாக நடந்து வருகின்றன.
நன்றி: தினத்தந்தி