சென்னையில் மரணித்த மருத்துவர்!.. சொந்த வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய காவல்துறை!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தற்கொலை செய்து கொண்ட பல் மருத்துவரின் உடலை ஆம்பூரில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் சுதா. இவரும் இவரது கணவர் சத்யாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவர்களாக பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நங்கநல்லூரில் வசித்த வந்த இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் மருத்துவர் சுதா நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து நங்கநல்லூர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதமானது இன்று மாலை அவரது வீட்டிற்கு அமரர் ஊர்தி மூலம் கொண்டு வந்த நிலையில், பிரேதத்தை ஆம்பூர் காவல் துறையினர் திடீரென தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பிரேதத்தை அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்படாமல் கிருஷ்ணாபுரம் பாலாற்றங்கரை அருகே கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது.
இது குறித்துக் காவல் அதிகாரிகள் கூறும் போது கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருவதால் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.