‘மூடப்பட்ட சென்னையின் எல்லைகள்’.. அமலுக்கு வந்த ‘முழு ஊரடங்கு’.. இந்த 12 நாள் என்னென்ன இயங்கும்? எவை இயங்காது..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கின் போது என்னென்ன இயங்கும், இயங்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் 12 நாட்களிலும், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு தடையில்லை.
2) வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன இயக்கத்திற்கு அனுமதி இல்லை. அதேசமயம், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் அவை அனுமதிக்கப்படும்.
3) தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். மத்திய அரசு அலுவலகங்களும் 33 சதவீத ஊழியர்களோடு செயல்படலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுவிட்டு, பணிக்கு வர தேவையில்லை.
4) பொதுவிநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு, பணியாளர்களே அத்தியாவசிய பொருட்களை நேரடியாக வழங்குவார்கள்.
5) காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் சமூக இடைவெளியோடு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.
6) இதேபோல், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள கடைகளிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
7) உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது. உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதி உண்டு. ஆனாலும், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து உரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
8) அதேபோல் அம்மா உணவகங்களும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டு மாநகரம் முழுவதும் 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கை மீறி வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சென்னையின் 12 எல்லைகளும் மூடப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெறுகிறது.