‘குவிந்த எதிர்ப்பு!’.. ‘குப்பை கட்டணத்துக்கு குட் பை?’ - மின்னல் வேகத்தில் சென்னை மாநகராட்சியிடம் இருந்து வந்த அடுத்த அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகராட்சியில் தினந்தோறும் சுமார் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
இதில் மக்கும் குப்பைகளை இயற்கை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை தார் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது 60 சதவீதம் மக்கள் மட்டுமே குப்பையை தரம் பிரித்து வழங்கி வரும் நிலையில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக செயல்படுத்தும் விதமாக திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.
அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் , திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய், உணவுக் கூடங்களுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய், அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய், கடைகளுக்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய், விழாக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20,000 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்தது.
இதற்கு சிலர் வரவேற்பு தெரிவித்ததுடன், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதே சமயம் குப்பைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் நடைமுறை அமலுக்கு வந்தால் வீட்டு வாடகையில் குப்பைக்கு தனிக் காசு கொடுக்க வேண்டும் என வாடகை வீடுதாரர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து குப்பை வரி வசூலிக்கும் முடிவை, அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டப்படுவதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டம் நிறுத்தப் பட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.