'ஆமா, சார் நான் குடிச்சிருக்கேன்'... 'என்ன யாருன்னு தெரியலையா'?... 'என் பேக்ரவுண்ட் தெரியுமா'?... சென்னையில் நடந்த பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நள்ளிரவில் மது போதையில் வந்த இளைஞர் போலீசாரிடம் மல்லுக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். மது போதையில் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கையினை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நள்ளிரவு எழும்பூரிலிருந்து மெரினா நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கினார்கள்.
இதையடுத்து அந்த இளைஞர் மது அருந்தியுள்ளாரா என்பதைச் சோதிக்க மதுவின் அளவை சோதிக்கும் ப்ரீதலைசர் கருவியைக் காண்பித்து அதில் பொருத்தப்பட்டிருந்த குழாயில் ஊதுமாறு கூறினார்கள். அதற்கு அந்த இளைஞர் ஆமாம், நான் குடித்திருக்கிறேன். ஆனால் இதில் மட்டும் என்னால் ஊத முடியாது என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு போலீசார் ப்ரீதலைசர் கருவி மூலம் சோதனை செய்தால் மட்டுமே உங்களின் மது அளவு தெரிய வரும்.
அதன்பின்னர் தான் வழக்குப் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும். எனவே ப்ரீதலைசர் கருவியில் ஊதுங்கள் என போலீசார் கூறினர். ஆனால் போலீசார் சொன்னதைக் கேட்காத அந்த இளைஞர், என்னை யாரென்று தெரியலையா, எனது பின்புலம் என்னவென்று தெரியுமா, எனக்கு யாரையெல்லாம் தெரியும் என்று உங்களுக்குத் தெரியுமா என போலீசாரிடம் மல்லுக்கட்ட ஆரம்பித்தார் அந்த இளைஞர்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார், போக்குவரத்து ஆய்வாளருக்கு போனில் நடந்த சம்பவங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதிக்குப் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விரைந்து வந்தார். அதுவரை போலீசாரிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞர், இன்ஸ்பெக்டர் வந்ததும் பொட்டி பாம்பாக அடங்கி கையை கட்டிக்கொண்டு நின்றார்.
இன்ஸ்பெக்டர் அந்த இளைஞரிடம் ப்ரீதலைசர் கருவியில் ஊதுங்கள் என கூறிய நிலையில் மீண்டும் பழைய புராணத்தைப் பாடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் போலீசார் தங்களது பொறுமையை இழந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சற்று அதட்டும் குரலில் கேட்டதும் தானாக இறங்கி வந்த இளைஞர், ப்ரீதலைசர் கருவியில் ஊதினார். அப்போது மதுவின் அளவு 200 மில்லி கிராம் என காண்பித்தது.
அதன் பின்னர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளைஞரின் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், வீட்டிற்குப் பொடிநடையாகச் செல்லுமாறு கூறினார்கள். நள்ளிரவில் போலீசாரிடம் இளைஞர் மல்லுக்கட்டிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்
