முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் கார் நின்ற வழக்கில் பரபரப்பு திருப்பம்.. மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே, கடந்த மாதம் 25-ம் தேதி வெடிபொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் மர்ம நபர்கள் தனது காரை திருடி வெடிபொருட்களுடன் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்தியதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்து இருந்தார். இதனிடையே காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் கடந்த 5-ம் தேதி தானே கழிமுகப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் மற்றும் ஹிரேன் மன்சுக் மரணத்தில் மும்பை காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. மேலும் அவரை பணியிடைநீக்கம் செய்து, கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இதேபோல் ஹிரேன் மன்சுக்கின் மனைவியும் தனது கணவரின் மரணத்தில் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை அடுத்து மகராஷ்டிரா மாநில அரசு, காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாசேவை குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து பொதுமக்கள் குறைதீா்ப்பு மையத்திற்கு மாற்றியது.
மேலும், கார் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் மரணம் தொடர்பாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதேநேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில் வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாசேவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் சுமார் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனை அடுத்து இரவு 11.30 மணியளவில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாசேவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்த தகவலை என்ஐஏ செய்தி தொடர்பாளர் வெளியிட்டார். முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.