காதல் விவகாரத்தில்.. ‘பையனின் தாய்க்கு நடந்த பயங்கரம்..’
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Jul 19, 2019 06:47 PM
கடலூரில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் பையனின் தாய் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்த செல்வி என்பவரது மகனும், அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருடைய மகளும் காதலித்து வந்துள்ளனர். இது பெண்ணின் தந்தைக்குப் பிடிக்காமல் போக அவர் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் இருவரும் ஊரை விட்டுச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த பையனின் தாய் செல்வியை அங்கு வந்த கொளஞ்சி ஆபாசமாகத் திட்டியுள்ளார். மேலும் அவரை அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த கிராமத்தினர் உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.