‘உயிருடன் இருந்தவரை இறந்ததாகக் கூறிய டாக்டர்..’ பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த பரிதாபம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 22, 2019 11:37 PM

மத்திய பிரதேசத்தில் மருத்துவரின் கவனக்குறைவால் உயிரிழந்ததாக பிணவறையில் வைக்கப்பட்டு, பின்னர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

old man declared dead by doctor found alive in mortuary

மத்திய பிரதேசத்தை சேர்ந்த காஷிராம் என்ற 72 வயது முதியவர் அண்மையில் சாலையில் மயங்கி விழுந்தபோது போலீஸாரால் மீட்கப்பட்டு அங்குள்ள பீனா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அன்றைய தினமே முதியவர் இறந்துவிட்டதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் மருத்துவமனை பிணவறைக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறுநாள் காஷிராம் உடலை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய முயன்றபோது, அவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இதுபற்றிப் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதியவர் சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து பணியில் இருந்த மருத்துவரின் கவனக்குறைவாலேயே முதியவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள போலீஸார், அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : #SHOCKING