தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனையடுத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் சைதை சாதிக் தமிழக பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனிடையே சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்பி கனிமொழியை குறிப்பிட்டு பதிவு ஒன்றை எழுதியிருந்தார். இதையடுத்து நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தார் எம்பி கனிமொழி.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சாதிக்கை கண்டித்து பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். அப்போது அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவர் கோஷமிட்டவாறே காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏறினார்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை எதிர்த்து திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, கோவை ஆகிய பகுதிகளில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.