'நான் படிச்ச ஸ்கூல் இது' ... 'அப்படி நடக்க ஒரு நாளும் விடமாட்டேன்' ... ஆட்டோ டிரைவர் செய்து வரும் நெகிழ்ச்சி சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஒன்றில் சில ஆண்டுகள் முன்பு வரை மிகவும் குறைவான மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 64 மாணவர்கள் வரை படிக்கின்றனர்.

ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் போன்ற பல வகுப்புகள் மூலம் அங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், மாணவர்கள் அதிகரிக்க இன்னொரு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ். அவர் செய்து வரும் உதவியும் மாணவர்களை பள்ளியை நோக்கி வர உதவி செய்து வருகிறது.
சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று கல்வி கற்று வந்த மாணவர்களை அவர்களின் வீட்டுக்கே சென்று, இலவசமாக தனது ஆட்டோவில் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து வருகிறார். இது குறித்து ஆட்டோ டிரைவர் சுரேஷ் கூறுகையில், 'பள்ளியின் தலைமையாசிரியர் என்னுடைய ஆட்டோவில் தான் தினமும் பள்ளிக்கு செல்வார். அப்படி ஒரு நாள் என்னிடம் பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வருவதில்லை. அதனால் பள்ளிக்கூடத்தை விரைவில் மூடி விடுவார்கள். சில மாணவர்கள் இதனால் தனியார் பள்ளிக்கு சென்று விட்டார்கள். இங்கு வரும் மாணவர்களும் 2 கிலோமீட்டர் வரை நடந்து பள்ளிக்கு வர வேண்டும். இதில் சிரமம் இருப்பதால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப யோசிக்கிறார்கள்' என என்னிடம் கூறினார்கள்.
இதைக் கேட்டதும் மனமுடைந்த சுரேஷ் ஆட்டோவை எடுத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 'அங்குள்ள பெற்றோர்கள் தங்களது சூழ்நிலைகளை என்னிடம் விளக்கினர். அப்போது தான் இந்த பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு இலவசமாக அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். மாணவர்களை அழைத்து பள்ளியில் சேர்த்த பின் தான் எனது சவாரியை ஆரம்பிப்பேன். ரெண்டு வருடமாக இப்படி செய்து கொண்டிருக்கிறேன். தற்போது குழந்தைகளின் பெற்றோர்கள் டீசலுக்கான காசினை தருகின்றனர். அவர்களாக முன் வந்து தருவதால் எனக்கும் வேண்டாம் என சொல்ல மனம் வரவில்லை. நான் படித்து, தற்போது என் மகள் படித்து வரும் இந்த பள்ளியை ஒரு போதும் மூட விடமாட்டேன்' என்கிறார் கட்டாயமாக.
சுரேஷ் அவர்களின் நடவடிக்கையால் ஊரிலுள்ள பல இளைஞர்கள் முன்வந்து பள்ளியின் அடிப்படை தேவைகளை தற்போது பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
