'புதுசு புதுசா யோசிக்கிறாங்களே'.. 'விநோதமாக பேனர் வைத்து'.. மக்கள் செய்யும் நூதனப் போராட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 20, 2019 11:45 AM
லட்சக்கணக்கில் செலவு செய்து பேருந்து நிலையம் அமைத்து 6 மாத காலங்கள் ஆகியும், இன்னும் அந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என்பதை விமர்சித்து நூதன பேர் வைத்துள்ள ஊர் மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ளது அம்மாபட்டினம். இவ்வழியே சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிற்காததால், பல வருடங்களால பார்க்காத அதிகாரிகள் இல்லை; அளிக்காத மனுக்கள் இல்லை. ஒருவழியாக இவ்வூர் மக்களின் துயர்துடைக்கும் வகையில் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து எடுத்து 7 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பேருந்து நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் ஒரே ஒரு டவுன் பஸ்ஸைத் தவிர, எந்த பேருந்துகளும் நிற்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர், இவ்வூர் மக்கள். குறிப்பாக சென்னைக்குச் செல்லும் பலர் இவ்வூரில் இருப்பதாகவும், ஆனாலும் ஈ.சி.ஆர் வழியாக சென்னை செல்லும் பேருந்து உட்பட, ஒரு சென்னை பேருந்தும் நிற்பதில்லை என்பதால், சில கிலோமீட்டர்கள் பயணம் செய்து மணமேல்குடி அல்லது கோட்டைப்பட்டினம் சென்று பஸ் ஏறி வேண்டியுள்ளதாக இவ்வூர் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, இம்மக்கள் வைத்துள்ள நூதன போராட்ட பேனரில், ‘5 லட்சம் செலவு செய்து கல்யாணமாகியும் இன்னும் கணவன் வீட்டுக்கு வரவில்லை’ என்று ‘மெல்ல மெல்ல விதவையாகும்-அம்மா பட்டினம் பேருந்து நிலையம்’ சொல்வது போலவும் வைத்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் இல்லை என்றும், மேலதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்து, தங்கள் பிரச்சனையைத் தீர்க்கவேண்டும் என்று அம்மக்கள் கோருகின்றார்.