கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன், தாயார் 'கைது'!.. 'அதே நாள்... அதே நேரத்தில்... 'திடீர் மாப்பிள்ளை'யாக உறவினர் மகன் தேர்வு'!.. பெண் வீட்டார் 'மாஸ்' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆற்காடு அருகே திருமணம் நிச்சயமான நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன் தாயுடன் கைதானார். இதனையடுத்து உறவினர் மகன் 'திடீர்' மாப்பிள்ளையானார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த ரமேஷ்-மோகனமாலா தம்பதி மகள் வனிதா (வயது 25). முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்து உள்ளார். இவருக்கும், ஆற்காட்டை அடுத்த ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சசிகுமார் என்ற பரசுராமர் (31) என்பவருக்கும் கடந்த மாதம் 10-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது, பெண்ணுக்கு 20 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 5 பவுன் நகையும், ஒரு மோட்டார் சைக்கிளும் வாங்கி தருவதாக பெண் வீட்டார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருவருக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆற்காட்டில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பரசுராமர், அவரது தாயார் புவனேஸ்வரி (63) மற்றும் உறவினர்கள் சிலரும் மணப்பெண் வீட்டிற்கு சென்று, பெண்ணுக்கு 50 பவுன் நகையும், வரதட்சணையாக ரூ.2 லட்சம் ரொக்கமும் தந்தால்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறி உள்ளனர்.
நிச்சயத்தின்போது பேசி முடிக்கப்பட்டதை விட கூடுதல் வரதட்சணை கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் செய்வதறியாமல் திகைத்தனர். இதனால் நிச்சயிக்கப்பட்டவருடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார், அதே நாளில் தங்கள் பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் நடத்த சபதம் எடுத்தனர்.
இதனையடுத்து, மணப்பெண் குடும்பத்தினர், உறவினர்களுடன் கலந்து பேசியதையடுத்து ஆற்காடு பகுதியை சேர்ந்த உறவினரான அப்பாத்துரை என்பவரின் மகன் சசிகுமார் (30) 'திடீர்' மாப்பிள்ளையானார். அதன்படி வனிதா-சசிகுமார் திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டபடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதே இடத்தில் நடத்த இரு வீட்டாரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதையடுத்து கூடுதல் வரதட்சணை கேட்ட பரசுராமர், அவரது தாயார் புவனேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை மகளிர் போலீசில் பெண்ணின் தாயார் மோகனமாலா, புகார் அளித்தார். அதன்பேரில் பரசுராமர், அவரது தாயார் புவனேஸ்வரி ஆகியோரை இன்ஸ்பெக்டர் வாசுகி மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திருமணம் ஆக இருந்த நிலையில் மணமகன் கைது செய்யப்பட்டதும், மணமகளின் உறவினர் மகன் 'திடீர்' மாப்பிள்ளையானதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
