"ஸ்கூல் 'ப்ரெண்ட்ஸ்'ங்க தான் புல் சப்போர்ட்" ... கொரோனாவின் பிடியில் "19 நாட்கள்" ... மீண்டு வந்த இளைஞரின் அனுபவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 13, 2020 06:32 PM

கொரோனா வைரஸ் தொற்று மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல பலர் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான அஹமதுல்லா என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 19 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

An Youngster who recovered from Corona share his experience

தனது வாழ்வில் மிக கடினமான அந்த நாட்கள் குறித்து அவர் கூறுகையில், ' துபாய் சென்று திரும்பிய எனக்கு கொரோனா இருப்பது கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி உறுதியானது. தொடக்கத்தில் சில நாட்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். பிறகு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். எனது வீட்டில் அண்ணன், தங்கை, அண்ணனின் குழந்தைகள் என எப்போதும் நிரம்பி இருக்கும். தற்போது தனிமையில் இருப்பதால் மனதிற்குள் சற்று வருத்தம் தோன்றியது. வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு வீடியோ கால் செய்தால் அவர்கள் வீணாக என்னை நினைத்து வருத்தப்படுவார்கள் என்பதால் அடிக்கடி அழைப்பதை தவிர்த்தேன்' என்றார்.

கடினமான சமயத்தில் தனது நண்பர்கள் செய்த உதவி குறித்து அஹமதுல்லா கூறுகையில், 'இதனால் தனிமையில் இருந்த எனக்கு பள்ளி நண்பர்கள் நம்பிக்கையளித்தார்கள். பள்ளி நாட்களின் நினைவுகளை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டோம். அந்த நினைவுகள் என்னை சந்தோசமாக இருக்க உதவி செய்தது. அதன் பிறகு தன்னம்பிக்கையுடன் இருக்க முடிவு செய்தேன். நான் மீண்டு வருவேன் என மனதில் ஆழமாக கூறிக் கொண்டேன். அந்த முயற்சி தான் என்னை மீட்டு கொண்டு வந்தது' என்கிறார்.

தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள அஹமதுல்லா 28 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.