வாகனங்களை நிறுத்தி "வழிப்பறி" ... மோசடியில் ஈடுபட்ட நபரை ... லாவகமாக தூக்கிய "போலீஸ்"!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை அருகே அருண்பிரகாஷ் என்ற ஆசாமி, தனது பைக்கில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டி போலீசார் இல்லாத பகுதியாக தேர்ந்தெடுத்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். வாகனங்களில் சென்ற சிலரைத் தடுத்து நிறுத்திய அருண்பிரகாஷ், போலீசார் தொனியில் மிரட்டி சுமார் 7,000 ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் பறித்துள்ளார். அதே போல காய்கறி வியாபாரத்திற்கு சென்ற பெண் ஒருவரிடம் சுமார் 5,000 ரூபாய் வரை மிரட்டிப் பறித்துள்ளார். அது மட்டுமில்லாது தன்னை காவல் நிலையத்தில் வந்து பார்க்க வேண்டும் எனவும் கூறி அனுப்பியுள்ளார்.
போலீஸ் என்ற பெயரில் போலியாக வழிப்பறி செய்த அருண்பிரகாஷை போலீசார் அவரது பைக்கின் நம்பரை வைத்து தேட ஆரம்பித்தனர். திருமலை பகுதியில் பைக்கில் இருந்த அருண்பிரகாஷை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்த போது, அங்கிருந்து தப்பிக்க முயன்ற அருண், தவறி கீழே விழுந்ததில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் மருத்துவமனை கொண்டு சென்று மாவு கட்டு போட்ட பின்னர் போலீசார் அருண்பிரகாஷை கைது செய்தனர். மேலும், அவர் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். முன்னதாக அருண் பிரகாஷ் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பலவேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.