‘எப்படியாவது குழந்தையை காப்பாத்தணும்’!.. கண்முன் காத்திருந்த மிகப்பெரிய சவால்.. பரபரப்பு நிமிடங்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிறந்து இரண்டு மாதம் ஆன குழந்தையை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்ஸ் டிரைவர் எடுத்த முயற்சி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு ஆசிரியர் காலனியை சேர்ந்தவர்கள் ஜீவா-லெட்சுமி தம்பதியனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆரூரன் என பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில் குழந்தைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் இருதயம் வீங்கி வருவதாக கூறினர். இதனை அடுத்து தஞ்சாவூர் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் குழந்தையை காட்டியபோது, மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதற்கான சிறப்பு மருத்துவர் கோவை ஜிகேஎன்எம் என்ற தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்றும் உடனடியாக அங்கு சென்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குழந்தையின் உடல் தொடர்ந்து சுகவீனம் அடைந்ததால், உடனே ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். ஆனால் தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு செல்ல குறைந்தபட்சம் 5 மணிநேரம் ஆகும். அதனால் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதனை அடுத்து தமிழ்நாடு ஆல் டிரைவர்ஸ் அசோஷியேசன் மூலம் தஞ்சாவூரிலிருந்து கோவை செல்லும் வழியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குழந்தையை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொறுப்பை, தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பாரத்தசாரதி கையில் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் பயணிக்கும் அனைத்து சாலைகளையும், தற்காலிகமாக மாற்றி அமைக்க திருச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடமும், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் உதவி பெறப்பட்டது. அதன்படி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வாகனம் கடக்கும் அனைத்து சாலைகளில் உள்ள சிக்னல்களை நிறுத்திச் சாலையை வேகமாகக் கடக்க வழிவகை செய்தனர்.
அதிகாலை 5.35 மணிக்கு குழந்தை, தாய் லெட்சுமி மற்றும் உறவினர்கள், செவிலியர் ஒருவருடன் ஆம்புலன்ஸை பார்த்தசாரதி ஓட்டிச் சென்றார். சுமார் 265 கிலோமீட்டர் தூரத்தை 2.45 மணி நேரத்தில் கடந்து காலை 8.20 மணியளவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்தது. இதனை அடுத்து உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து தெரிவித்த ஆம்புலன்ஸ் டிரைவர் பாரத்தசாரதி, ‘நான் 8 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறேன், தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு செல்ல சுமார் 5.30 மணிநேரம் பிடிக்கும். நான் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்பு அதே மருத்துவமனைக்கு ஒரு குழந்தையை 5 மணிநேரத்தில் கொண்டு சென்றேன். தற்போது நான் 2.45 மணிநேரத்தில் சென்றுள்ளேன். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறையினர் மற்றும் சக ஓட்டுநர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்தசாரதிக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
