'முதல்ல ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி'... 'அப்புறமா என்னோட சுயரூபத்தை பாப்பீங்க'... சசிகலா அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சசிகலா கட்சி நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சசிகலா தனக்குக் கடிதம் எழுதும் கட்சி நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அவ்வாறு நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. அந்த வகையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஏழுமலையிடம் நேற்று சசிகலா பேசியுள்ளார்.
அதில், ''2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத நேரத்திலும் பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தார். ஆனால் அதை மறந்துவிட்டு சிலர் கட்சியைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இருந்தால் இன்றைக்கு ஆட்சி நம்ம ஆட்சியாக இருந்திருக்கும். அதனால் ஒன்றும் கவலைப்படாதீர்கள்.
நிச்சயம் நல்லது நடக்கும். அவர்கள் எதுவும் புரியாமல் செஞ்சுட்டாங்க. அதை உணருகிற நேரம் வந்திருச்சு. கட்சி தொண்டர்களுக்கும் தெரியுது. தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லாத் தெரிகிறது. ஆனா ஒருத்தர் இரண்டு பேருக்கு மட்டும் தெரியாமல் இருக்கிறது. அது தெரிகிற காலம் விரைவில் வரும் கவலைப்படாதீங்க.
இப்போது கொரோனா ஊரடங்கு 12-ந் தேதி வரைக்கும் சொல்லி இருக்காங்க. அது முடிந்ததும் நான் வந்துடுவேன். ஜெயலலிதா சமாதிக்கு போயிட்டு அதுக்கப்புறம் நான் எல்லோரையும் பார்க்கிறேன். கவலைப்படாதீர்கள். எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன். அ.தி.மு.க.வை நான் வழி நடத்துவது நிச்சயம் நடக்கும்.
கிராமத்தில் ஒன்று சொல்லுவார்கள். தண்ணீர் இருக்கிறது, தண்ணியில நுரை இருக்கும். அந்த நுரை தேவையில்லாதது. அதுக்காக நாம தண்ணி குடிக்காமல் இருக்கோமா... அதை ஒதுக்கிட்டு குடிக்கிறோமா இல்லையா. அதுபோல நெல்லு இருக்கிறது, அரிசியை நாம் சாப்பிடுகிறோம். நெல்லோட தோல், உமியை ஒதுக்கிட்டு தானே நாம சாப்பிடுகிறோம்.
அதனால் நம்மைப் பொறுத்தவரைக்கும், நல்லதை எடுத்துக்குவோம். சரியில்லாததை விட்டுவிடுவோம். எதையுமே யோசித்து நல்லபடியா செய்யலாம். எல்லோரும் பார்த்து வியக்கிற அளவுக்குக் கட்சியைக் கொண்டு வந்துடுவோம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா இருவரையும் நினைத்து கட்சி பணியாற்றினால் மீண்டும் கழகம் வீறுகொண்டு எழும். அடுத்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம ஜெயிச்சிடலாம். தொண்டர்களின் ஆசையை நான் நிறைவேற்றிக் காட்டுவேன்'' எனக் கூறியுள்ளார்.