'மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்...' 'எழுவர் விடுதலை...' 'வாரி வழங்கிய எண்ணற்ற சலுகைகள்...' - மலைக்க வைக்கும் அதிமுக-வின் தேர்தல் அறிக்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வெளியிட்டனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 178 தொகுதிகளில் களமிறங்குகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடும் பணி தொடங்கியது.
திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியான நிலையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இருவரும் வெளியிட்டனர். முக்கிய திட்டமாக அம்மா வாஷிங் மெஷின் மற்றும் அனைவருக்கும் வீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 'எழுவர் விடுதலை' முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் 'மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்' என்பதும் மக்களிடையே குறிப்பாக தாய்மார்களிடையே பெரும் வரவேற்ப்பை பெறும் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்கப்படும்.
அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் 'அம்மா இல்லம் திட்டம்'.
மகளிர் நலம் காக்கும் 'குலவிளக்குத் திட்டம்'.
மகளிருக்கு பேருந்து சலுகை.
ரேஷன் பொருள்கள் வீடு தேடிவந்து கொடுக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும்.
அம்மா துணி துவைக்கும் இயந்திரம் வழங்கும் திட்டம்.
கல்லூரி மாணாக்கர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி இலவச டேட்டா.
வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.
முதியோருக்கான ஊதியத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 -ஆக உயர்வு.
மத்திய அரசு பணிக்கு மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும்.
தமிழ் மொழிப்பாடம் பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும்.
உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்.
ஈழத்தமிழர்கள் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவர்.
ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் நிரந்தரதீர்வு.
காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு.
வேளாண் விளை பொருள்கள் லாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு உருவாக்கப்படும்.
பனைமரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்.
ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு அமைக்கப்படும்.
நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்.
நம்மாழ்வார் பெயரில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.
மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்.
100 நாள்கள் வேலை 150 நாள்களாக உயர்த்தப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பின்படி அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு.
மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.
நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவிகித பயணக் கட்டண சலுகை.
நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்.
கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை.
அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடன்
வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில் தொடங்க நிதியுதவித் திட்டம்.
9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை.
ரூ.25,000 மானியத்தில் எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ திட்டம்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கப்படும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.
திருநங்கைகளுக்கு சிறுதொழில் மானியம் ரூ.20,000-ல் இருந்து
ரூ.50,000 ஆக உயர்வு.
கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்
ரூ.1000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்வு.