‘அம்மா, அப்பாவை காணோம்’!.. ஒத்தையில நின்னு அழுதுட்டு இருந்த 12 வயது சிறுமி.. ‘யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது’.. அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் தாய், தந்தையை இழந்து நிர்கதியாய் நிற்கும் 12 வயது சிறுமி நந்தினிக்கு அரசு உதவி புரிய கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த அச்சன்குளம் பகுதியிலுள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 மாத கர்ப்பிணி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் உள்ளிட்ட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களுடன் சூரங்குடியைச் சேர்ந்த 45 வயதான பாக்கியராஜ் மற்றும் 40 வயதான செல்வி ஆகிய தம்பதியினரும் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் இந்த தம்பதியினரின் மகள் நந்தினி, பெற்றோரின் உடலை வாங்க கண்ணீருடன் உடற்கூறாய்வு அறையின் முன் நின்ற சம்பவம் காண்போரை கலங்க செய்தது.
இதுகுறித்து தெரித்த மாணவி நந்தினியின் உறவினர் சுகந்தி, ‘காலையில் வேலைக்கு போறோம்னு போனவங்க, எங்களுக்கு விபத்து நடந்தது தெரியாது. இந்த பொண்ணுதான் அப்பா, அம்மாவை காணோம்னு அழுதுகிட்டே போன் பண்ணி வர சொல்லிச்சு. உடனே நாங்க போனா, ஒத்தையில நின்னு அழுதுகிட்டு இருந்துச்சு. அப்புறம் நாங்கதான் கூப்பிட்டு வச்சுருக்கோம். இந்த பிள்ளைக்கு தேவையான உதவியை மத்திய, மாநில அரசும், ஆலை நிர்வாகமும் செய்யவேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.
தினமும் மகளை பட்டாசு ஆலைக்கு உடன் அழைத்துச் செல்லும் தம்பதியினர், அதிர்ஷ்டவசமாக அன்று வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். உறவினர்கள் எப்படி பார்த்துக் கொண்டாலும் தாய், தந்தைக்கு ஈடாகாது என கூறிய அப்பகுதி மக்கள், யாருக்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது என தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் தாய், தந்தையை இழந்து நிர்கதியாய் தவிக்கும் சிறுமி நந்தினிக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.