'எவ்வளவு நம்பிக்கையா இருந்தோம்'?...' எங்க மொத்த உழைப்பும் வீணா போச்சு!'.. கடும் வேதனையில் உற்பத்தியாளர்கள்!.. தீர்வு தான் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் அங்கு தேக்கமடைந்துள்ளதால் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு ஆர்டர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பட்டாசு உற்பத்தியில் இந்திய அளவில் முக்கிய இடம் வகிக்கும் நகரம் சிவகாசி.
அங்கு இயங்கி வரும் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆர்டர் தொடங்கிய 2 மாதத்தில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது.
அதன் காரணமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு காலத்தில் 50 விழுக்காடு பணியாளர்களுடன் உற்பத்தியை தொடங்கலாம் என அரசு அறிவித்த நிலையிலும் போக்குவரத்து முடங்கியதால், மூலப்பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
ஹோலி, விநாயகர் சதுர்த்தி, ஓணம், தசரா உள்ளிட்ட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டதால் பட்டாசு ஆர்டர்கள் வரவில்லை.
அனைத்தும் சீராகி ஆலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும் கடந்த ஆண்டை விட உற்பத்தி குறைவாகவே இருந்தது.
அதேபோல் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி பணி முடிவடைந்த பின்பாக விடுமுறை அளிக்கப்பட்டு அதனை தொடர்ந்து மீண்டும் 15 நாட்களில் பட்டாசு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும்.
ஆனால், நடப்பாண்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளே பெருமளவில் தேக்கமடைந்துள்ளதால், அடுத்த உற்பத்தி தொடங்குவது கேள்விக்குறியாகி உள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் பேருக்கான வாழ்வாதாரமாக உள்ள பட்டாசுத் தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
