U19 WORLD CUP: மறுபடியும் கிளம்பிய ‘மான்கட்’ சர்ச்சை.. யுவராஜ் கடும் கண்டனம்.. ஆனா ஒரு வீரர் மட்டும் ஆதரவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உகாண்டா வீரர் மான்கட் முறையில் அவுட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பப்புவா நியூ கினி மற்றும் உகாண்டா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த உகாண்டா அணி, 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி அணி, 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், 35 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இப்போட்டியில் உகாண்டா வீரர் மான்கட் முறையில் அவுட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், பப்புவா நியூ கினி அணி பேட்டிங் செய்தபோது, 16-வது ஓவரை உகாண்டா பந்துவீச்சாளர் பாகுமா வீசினார். அப்போது நான்-ஸ்ட்ரைக்கர் என்டில் இருந்த பேட்ஸ்மேன் ஜான் கரிகோ, பந்து வீசுவாதற்கு முன்பாகவே கிரீஸை விட்டு வெளியே நின்றுள்ளார். இதை கவனித்த பவுலர் பாகுமா மான்கட் முறையில் அவுட் செய்துவிட்டு அம்பயரிடம் அப்பீல் செய்தார். உடனே அம்பயரும் இதற்கு அவுட் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கமெண்ட் செய்த இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ‘உண்மையிலேயே மோசமானது’ என காட்டமாக பதிவிட்டுள்ளார். அதேவேளையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஷம்ஷி இந்த அவுட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதில், ‘இதில் எந்த தவறும் இல்லை. பவுலர் பந்து வீசும் முன் பேட்ஸ்மேன் க்ரீஸை தாண்டி நின்றுள்ளார். பவுலர் பந்துவீசும் போது ஒரு மில்லிமீட்டர் க்ரீஸை தாட்டி காலை வைத்தால் தவறு, ஃப்ரீ கிட் கொடுக்கப்படுகிறது. அதேபோல் பேட்ஸ்மேனும் க்ரீஸுக்கு பின்னால்தான் இருக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லரை, பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஸ்வின் மான்கட் செய்திருப்பார். அது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.