சும்மா ஒன்னும் அவர் இந்த இடத்துக்கு வந்துர்ல.. ‘நானே கண்கூடா பார்த்துருக்கேன்’.. கோலியின் அசுர வளர்ச்சிக்கு ‘இதுதான்’ காரணம்.. யுவராஜ் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் வளர்ச்சி குறித்து யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், கிரிக்கெட் பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையை கைப்பற்ற யுவராஜ் சிங் முக்கிய காரணமாக இருந்தார். இதனை அடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அதிலிருந்து மீண்டு மறுபடியும் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால், அதன்பிறகு அவரால் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் இந்திய அணியில் அவருக்கு நீண்ட காலமாக இடம் கிடைக்காமல் இருந்தது.
இதனை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 10 தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்தார். தற்போது கிரிக்கெட் குறித்து கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களிடம் அடிக்கடி யுவராஜ் சிங் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் விராட் கோலி குறித்து அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில், ‘விராட் கோலி இந்திய அணியில் இணையும் போதே நம்பிக்கைக்குரிய வீரராக இருந்தார். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியதால், சீக்கிரமாகவே 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அந்த சமயம் கோலிக்கும், ரோஹித்துக்கும்தான் போட்டி இருந்தது. ஆனால் கோலி ரன்களை குவித்துக்கொண்டே இருந்ததால், உலகக்கோப்பையில் விளையாடி அவரது கிரிக்கெட் வாழ்க்கையே மாறியது’ யுவராஜ் சிங் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘கோலி எப்போதும் முறையாக பயிற்சி செய்பவர். கடினமாக உழைத்தால்தான் சிறந்த பேட்ஸ்மேனாக வரமுடியும் என்று மிக கடின பயிற்சிகளை மேற்கொள்வார். இதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். தனது கிரிக்கெட் எதிர்காலத்துக்காக தன்னைதானே வடிவமைத்துக் கொண்டார். எல்லோரும் சொல்வதுபோல் கேப்டன் பொறுப்பால் அவரது பேட்டிங் பாதிக்கவில்லை. சொல்லப்போனால், இப்போதுதான் அவர் நிறைய ரன்களை குவித்து வருகிறார்.
பொதுவாக எல்லோருக்கும் ஓய்வு பெறும்போதுதான் லெஜண்ட் அந்தஸ்து கிடைக்கும். ஆனால் கோலி 30 வயதிலேயே அந்த அந்தஸ்தை அடைந்துள்ளார். ஏனென்றால் இப்போதே கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துவிட்டார். அவர் ஓய்வு பெறும்போது கிரிக்கெட்டின் உச்சத்தில் இருப்பார். இதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என விராட் கோலியை யுவராஜ் சிங் புகழ்ந்து பேசியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். இதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிதான் (70 சதங்கள்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.