'ரிஷப் இல்லை.. தினேஷ் உண்டு.. ராயுடு இல்லை.. ராகுல் உண்டு’..உலகக்கோப்பை இந்திய அணி.. தேர்வுக்குழு வியூகம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Apr 15, 2019 05:26 PM
உலகக் கோப்பை 2019க்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில், வரும் மே மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அடுத்து 2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் இங்கிலாந்து மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு தகுந்த பிட்சினைக் கொண்டிருப்பதால் 4-வது வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் என்கிற அடிப்படையில் யாரை தேர்வு செய்யலாம் என்கிற விஷயமும் முடிவுக்கு வந்தது. ஆம், அந்த வாய்ப்பு தற்போது தமிழக வீரர் விஜய் சங்கருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நடுவரிசையில் களமிறக்குவது பற்றிய யோசனையில் கே.எல்.ராகுல் மாற்று தொடக்க வீரராகவும் இருப்பதால் அவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவிர கூடுதல் ஆல்ரவுண்டராக ரவீந்தர் ஜடேஜாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. முன்னதாக தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தேர்வு செய்த அணியில் பெரிய மாற்றங்கள் இல்லாத நிலையில், அண்மைக்காலமாக ஒருநாள் போட்டியில் மோசமான பந்து வீச்சு காரணமாக உமேஷ் யாதவ் இந்த குழுவில் இடம் பெறுவது பற்றி பரிசீலிக்கப்படவில்லை என்பது தெரியவருகிறது.
குறிப்பாக 5 பேட்ஸ்மேன், 2 விக்கெட் கீப்பர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஆல்ரவுண்டர்கள், 2 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கள் என்கிற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இந்திய அணியில் ரிஷப் பந்த்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும், அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கே.எல்.ராகுலும் இடம்பெற்றுள்ளனர். ரிஷப் பந்த்துடன் ஒப்பிடுகையில் தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் வாய்ந்த விளையாட்டினால் தினேஷ் கார்த்திக்கும், நடுவரிசையில் களமிறக்குவது என்கிற ரீதியில் ஆலோசிக்கப்பட்டதால் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கே.எல்.ராகுலும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
