இரண்டு 'தமிழக வீரர்களுக்கும்' இடம் கிடைக்குமா'?...'4வது ஆர்டர்'ல யாரு இறங்க போறாங்க?...வெய்டிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 15, 2019 01:57 PM
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்த உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்களின் பட்டியலை,இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று மும்பையில் அறிவிக்கிறது.

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் கூடும் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியலை இன்று மும்பையில் அறிவிக்கிறது.இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
எந்தந்த வீரர்கள் அணியில் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த ஆவல் பரவலாக நிலவும் நிலையில்,சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர்களே பெரும்பாலும் உலக கோப்பை அணியிலும் தொடருவார்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.இருப்பினும் சில இடங்களுக்கு மட்டும் புது வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதனிடையே 2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்திக் தேர்வு செய்யப்படுவாரா அல்லது இளம் ரிஷப்பந்த் தேர்வு செய்யப்படுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.சர்வதேச அனுபவம், களத்தில் பொறுமை, மேட்ச் வின்னர் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.அதே நேரத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடி அதிகமான அனுபவம் இல்லாவிட்டாலும், இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்துள்ளார் ரிஷப் பந்த். அது அவருக்கு சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு இருக்கும் முக்கியச் சிக்கல் 4-வது இடத்தில் எந்த வீரரைத் தேர்வு செய்வது என்பது தான்.அந்த வகையில் அம்பதி ராயுடு, அஜின்கயே ராஹனே, ஸ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர், கே.எல்.ராகுல் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன.
டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் விஜய் சங்கரை 4-வது இடத்தில் இறக்கி சோதனை செய்யப்பட்டதில் அவர் திருப்திகரமாகவே செயல்பட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.எனவே அணியில் ஹர்திக் பாண்டியா தவிர்த்து கூடுதலாக ஆல்ரவுண்டர் தேவை என தேர்வு குழு நினைத்தால் விஜய் சங்கருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
