‘கோப்பை வாங்கித் தராத கேப்டன்.. இதுக்கே கோலி RCB-க்கு நன்றி சொல்லணும்: பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Mar 19, 2019 02:24 PM
இந்தியாவில் ஐ.பி.எல் ஃபீவர் தொடங்கியதை அடுத்து, தொடக்க ஆட்டத்தைக் காணவும், அதற்கு முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் வீரர்களின் பயிற்சி எடுப்பதைக் காணவும் ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதோடு, இந்த 8 அணிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்றும் விவாதங்கள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் ஐ.பி.எல் தொடர்பாக பேசும்போது, ஐபிஎல் தொடரை ஒரு சாதூரியமான கேப்டனாக கோலி வெற்றி பெறுவதை, தான் இன்னும் பார்க்கவில்லை என்றும், அதனால் அவர் இன்னும் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் பேசியவர், ‘தோனி, ரோகித் ஷர்மா கேப்டன்களாக ஐபிஎல் போட்டிகளை ஜெயித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் பயணிக்க வேண்டிய கோலியின் கேப்டன்ஷிப்பை தோனியுடனும் ரோகித்துடனும் ஒப்பிட முடியாது என்றாலும் சுமார் 7 ஆண்டுகளாக ஆர்.சி.பி அணியை வழிநடத்தி வரும் கோலி, கோப்பையை வென்று கொடுக்காமலே இருக்கிறார். ஆனாலும் அவரை அந்த அணி நிர்வாகம் தம் அணியின் கேப்டனாகவே வைத்திருப்பதற்காக கோலி அந்த அனியின் நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்றும் கம்பீர் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில், கோலி ஒரு கேப்டனாகவும் தன்னை ஐபிஎல் போட்டிகளில் நிரூபிக்க வேண்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக இதுபற்றி கோலி, தங்கள் அணியின் ஆலோசனைகள்படி, சரியாக அமையாத திட்டங்களும், தவறுதலான முடிவுகளும்தான் கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு காரணமாக இருந்ததாக விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், கம்பீர் இப்படி ஒரு விமர்சனத்தை கோலி மீது வைத்துள்ளார்.
இதேபோல் டெல்லி ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஓய்வு பெற்ற வீரர் ரிக்கி பாண்டிங், விராட் கோலியின் ஸ்டைலும், பதற்றமும் தன்னைப் போலவே இருப்பதாகவும், கோலி தனது ஆட்டத்தை மாற்றியமைத்தால் உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்றும் கருத்து கூறியுள்ளார்.
