‘ஆர்மி தொப்பி அணிந்து விளையாடியது தவறு’.. ஐசிசி -யிடம் பாகிஸ்தான் புகார்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 11, 2019 03:37 PM
ராணுவத் தொப்பியுடன் விளையாடிய இந்திய அணியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி -யிடம் முறையிட்டுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 -வது ஒருநாள் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். மேலும் அப்போட்டிக்கான இந்திய வீரர்களின் ஊதியத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐசிசி -யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி,‘அரசியலுக்காக கிரிக்கெட் மற்றும் எந்த ஒரு விளையாட்டையும் பயன்படுத்த கூடாது. இதற்கு முன்பாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த மொயின் அலி மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் ஆகியோர் கறுப்பு ஆடை அணிந்து விளையாடியதற்காக ஐசிசி தடைவிதித்தது. அதுபோல இந்திய அணியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இசான் மனி தெரிவித்துள்ளார்.
