டாஸ் போட்ட கொஞ்ச நேரத்தில் வந்த செய்தி.. ‘உடனே நிறுத்தப்பட்ட போட்டி’.. வேக வேகமாக ரூமிற்கு அனுப்பப்பட்ட வீரர்கள்.. என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி டாஸ் போட்ட சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 போட்டிகள் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 133 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் அலெக்ஸ் கேரி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதற்காக வீரர்கள் மைதானத்தில் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதனால் உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் அனைவரும் வேக வேகமாக அறைக்கு அனுப்பப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பரிசோதனைகள் முடிவுகள் வெளியான பின்னரே மீண்டும் போட்டிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இரு நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
