மூணுல ரெண்டு பங்கு மக்களுக்கு 'அது' உருவாகியிருக்கு...! - 'செரோ சர்வே' முடிவில் வெளியாகியுள்ள 'வியக்க' வைக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் குறித்த செரோ சர்வே என்ற சோதனையை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

செரோ சர்வே எனப்படுவது, ஒரு நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதித்து, அவர்களின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருக்கிறதா என சோதனை செய்யப்படும் ஒரு ஆய்வு என்று கூறலாம்.
மனித உடலில் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தால் அவர்களுக்கு கொரோனா வந்து போய் இருக்கிறது என்று உறுதி செய்யப்படுகிறது.
இந்த செரோ சர்வே இந்தியா முழுவதும் நான்காவது முறை ஜூன், ஜூலை மாதங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தி உள்ளது. அதன்படி ஆய்வுக்கு பொதுமக்களில் 28 ஆயிரத்து 975 பேரும், 7,252 சுகாதார பணியாளர்களும் இந்த செரோ சர்வேக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதன் முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி நேற்று (20-07-2021) வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால்,
இந்திய மக்களில் 6 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 67.6 % உடல்களில், அதாவது மூன்றில் இரு பங்கு மக்களிடத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அப்படியென்றால் அவர்களுக்கு கொரோனா வந்து சென்றுள்ளது.
சுகாதார பணியாளர்களிடம் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் 85 சதவீதத்தினருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் இருக்கிறது. ஆனால், பத்தில் ஒருவர் இன்னும் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர்.
அதோடு மூன்றில் ஒரு பங்கினரின் உடல்களில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் உருவாகாமல் இருக்கிறது. அதன்படி, சுமார் 40 கோடி பேருக்கு உடலில் நோய் எதிர்ப்பு பொருள் இல்லை எனவும் அதனால் எதிர்காலத்தில் இவர்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து உள்ளது எனவும் அந்த சர்வேயில் இருந்து தெரியவருகிறது.
மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில விஷயங்களையும் அதில் வற்புறுத்தியுள்ளது.
அதாவது கொரோனா பரவல் குறைத்து விட்டது என சமுதாய, மத, அரசியல் கூட்டங்கள் கூடுவது, அவசியமில்லாத பயணங்கள் ஆகியவற்றை தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.
அதோடு பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்களும் தடுப்பூசி கட்டாயமாக போட்டுக்கொண்ட பின் பள்ளிகளை திறப்பது தான் புத்திசாலித்தனமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
