111 நாடுகளில் பரவிய ‘டெல்டா’ வைரஸ்.. ‘கொரோனா 3-வது அலையை நெருங்கிட்டோம்’.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா 3-வது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட கொரோனா தொற்றின் 2-வது அலையில்தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை சுமார் 19 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom), கொரோனா 3-வது அலை குறித்து எச்சரிக்கை செய்துள்ளார். அதில், ‘துரதிர்ஷ்டவசமாக நாம் கொரோனா வைரஸ் 3-வது அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம். மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு, பொது சுகாதார நடவடிக்கைகளை சரியாக பின்பற்றாத நிலை ஆகியவவை கொரோனா தொற்று அதிகரிக்க வழி வகுத்துள்ளது. சமீப காலமாக ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தடுப்பூசி போடுவதை அதிகரித்ததால் நோய் தொற்றும், இறப்புகளும் குறைந்து வந்தன.
ஆனால் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தற்போது டெல்டா வைரஸ் 111 நாடுகளில் பரவி உள்ளது. இது விரைவில் உலகமெங்கும் பரவும் என தெரிகிறது. தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா பரவலை நிறுத்தி விடாது.
ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மக்கள் கூட்டமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.