‘கிட் பேக் எல்லாம் ரெடி’!.. என்ன கிளவுஸை மாட்டிறவா..? சூசகமாக ட்வீட் போட்ட DK..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்ய தயார் என சூசகமாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியது. இதனை அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்திலேயே தங்கி இருக்கின்றனர்.
இதற்கிடையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதேபோல் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே 3 பயிற்சி ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணியின் இரண்டு விக்கெட் கீப்பர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
😋 #justsaying pic.twitter.com/zX3ValErDc
— DK (@DineshKarthik) July 15, 2021
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், இங்கிலாந்து தொடரில் தான் விக்கெட் கீப்பிங் செய்ய தயார் என சூசகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘Just saying’ என்ற கேப்ஷனுடன் தனது கிட் பேக்கின் போட்டோவை பகிர்ந்துள்ளார். தற்போது வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில்தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.