"அந்த பேட்ஸ்மேன மட்டும் கரெக்ட்டான இடத்துல ஆட வைங்க... அப்புறம் இருக்கு கச்சேரி..." அஜய் ஜடேஜா கொடுத்த 'ஐடியா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி 20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கே எல் ராகுல் மூன்று போட்டிகளில் சேர்த்து, இதுவரை ஒரு ரன் மட்டுமே அடித்துள்ளார்.
மேலும், வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்குவதிலும், இந்திய அணி தவறு செய்து வருவதாக முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா (Ajay Jadeja), 'ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது, ஹர்திக் பாண்டியா (Harik Pandya), 6 ஆவது இடத்தில் களமிறங்கினார். இதனால், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டாம் தர பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இங்கிலாந்து தொடரில் நிலைமை அப்படியல்ல.
மூன்றாவது டி 20 போட்டியில், ஹர்திக் பாண்டியா 7 ஆவது இடத்தில் களமிறக்கப்பட்டார். இதன் காரணமாக, மார்க் வுட், ஆர்ச்சர் போன்ற முதல் தர பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தான் அவரால் முடிந்தது. அதே வேளையில், முன்கூட்டியே ஆறாவது இடத்தில் அவர் இறங்கி ஆடியிருந்தால், ஆதில் ரஷீத், சாம் குர்ரான், கிறிஸ் ஜோர்டன் போன்ற பந்து வீச்சாளர்களை அவர் சந்திக்க நேர்ந்திருக்கும்.
அப்படி இருக்கும் பட்சத்தில், அவர் நல்ல துவக்கத்தை அமைத்து, முதல் தர பந்து வீச்சாளர்களான மார்க் வுட், ஆர்ச்சர் ஆகியோரின் பந்தையும் மனஉறுதியுடன் வெளுத்து வாங்கியிருப்பார். இப்படி மாற்றி இறக்கி விடப்படுவதால் தான் இந்திய பேட்டிங் லைன் அப் சிறந்ததாக அமையவில்லை. இது பற்றி, இந்திய அணி நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும்' என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளதால், எந்தெந்தெ வீரர்களை இந்திய அணி இன்று களமிறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
