'ஆத்தாடி! இதில விராட் கோலி மட்டும்தானா?'... 'சாதனை புரிந்த ஒரே இந்திய விளையாட்டு வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 12, 2019 11:13 AM
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்தியாவிலிருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டது. இதில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் பிரபல நட்சத்திர வீரர், லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார். இவர், ஊதியம் மற்றும் விளம்பரங்களின் மூலம் மட்டும் 127 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகிறார்.
கால்பந்து நட்சத்திரமான போர்ச்சுக்கல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, 109 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் 2-ம் இடம் பெற்றார். மற்றொரு இளம் கால்பந்து நட்சத்திரமான, பிரேஸில் அணியைச் சேர்ந்த நெய்மர், 3-வது இடத்தைப் பிடித்தார். 5-வது இடத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் உள்ளார். டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 29.2 மில்லியன் டாலர்களுடன் 63-வது இடத்தில் உள்ளார். இந்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இவர்தான்.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒரே இந்தியராக திகழ்கிறார். 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் கடைசி இடமான 100-வது இடத்தை பிடித்தார். விராட் கோலியின் ஊதியம் 4 மில்லியன் அமெரிக்க டாலராகும். ஆனால் விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் மட்டும் 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகிறார். கடந்த ஆண்டில் 83-வது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 17 இடங்கள் பின்தங்கி 100-வது இடத்தை பிடித்துள்ளார்.
