"இன்னும் அத என்னால 'நம்ப' முடியல.. எங்கள மொத்தமா அடிச்சு நொறுக்கிட்டாங்க.." 'இந்திய' அணி பற்றி 'ஆஸ்திரேலிய' வீரர் சொன்ன 'வார்த்தை'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இம்மாதம் 18 ஆம் தேதி, சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
சமீபகாலமாக, கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த அணியாக வலம் வரும் இந்திய அணி, முதல் டெஸ்ட சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றி அசத்தும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியா மட்டுமில்லாது, வெளிநாட்டு மைதானங்களிலும், இந்திய அணி வீரர்கள், எதிரணியினரை அச்சுறுத்தும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு உதாரணமாக, கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, 4 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 36 ரன்களுக்குள் சுருண்டு படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது. இதிலிருந்து இந்திய அணி மீள முடியாது என பலரும் கருதிய நிலையில், மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றி, இந்திய அணி வரலாறு படைத்திருந்தது.
அதிலும் குறிப்பாக, கடைசி டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானமான கப்பாவில் நடைபெற்றிருந்தது. இங்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல், தோல்வியே சந்திக்காமல் இருந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இந்திய அணி புதிய சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றி பற்றி, ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா (Usman Khawaja) தற்போது மனம் திறந்துள்ளார்.
'கப்பா மைதானத்தில், 4 ஆவது இன்னிங்ஸில் எப்போதும் இலக்கை துரத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அங்கு மட்டுமல்ல, உலகின் எந்த மைதானமாக இருந்தாலும், 4 ஆவது இன்னிங்ஸில் ரன்களைத் துரத்திப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது ஒன்றுமல்ல. அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று தான் நினைத்தோம். ஆனால், அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கிய இந்திய அணி, இறுதி நாள் வரை நின்று அசத்தல் வெற்றியைப் பெற்றது.
போட்டியின் முடிவில் இந்திய அணி தான் சிறந்தது என்பதை நிரூபித்தும் விட்டார்கள். நாங்கள் நினைத்ததை விட, எங்களின் பந்து வீச்சாளர்களை, இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்த்து ஆடினர். அவர்கள் எண்களின் வேகப்பந்து வீச்சையும், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்தினையும் அடித்து நொறுக்கி விட்டார்கள். ஆஸ்திரேலிய அணியை மனதளவில் இந்திய அணி வீழ்த்தி விட்டது என்று தான் கூற வேண்டும். இறுதி போட்டி நடைபெற்ற கப்பாவில், இந்திய அணி எப்படி வெற்றி பெற்றது என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை' என உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.