BCCI : “அன்று கோலி.. இன்று சேத்தன் சர்மா.. அதே பாணியில் .. அதுவும் அதே தேதியில்”.. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்..! விபரம்.
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலக கோப்பை தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரை இறுதி போட்டியில் போராடி தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது.
டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடந்த ஆசிய கோப்பையில் கூட இறுதி போட்டியில் முன்னேறாமல் இந்திய அணி வெளியேறி இருந்தது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தோல்வியின் காரணமாக இந்திய அணி ஆசிய கோப்பையும் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு சூழலில், தற்போது இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரிலும் மோத உள்ளது. இந்த இரு தொடர்களுக்காக விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால், டி20 இந்திய அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்க உள்ளனர்.
அப்படி ஒரு சூழலில், சேத்தன் ஷர்மா தலைமையில் இருந்த இந்திய அணியின் தேர்வுக் குழுவை ஒட்டுமொத்தமாக பிசிசிஐ நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேலும் ஒட்டுமொத்தமாக அதில் இருந்த உறுப்பினர்களையும் நீக்கி உள்ளதால் புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களையும் விண்ணப்பிக்கும் படி பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய அணியின் தேர்வுக் குழு ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பாக விராட் கோலியை ஒப்பிட்டு ரசிகர்கள் தெரிவித்து வரும் கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் கோலி தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றுடன் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, டி20 தொடரின் கேப்டன் பதவியில் இருந்து முன்னர் அறிவித்தது போல விலகி இருந்தார் கோலி. இதனைத் தொடர்ந்து, ஒரு மாதம் கழித்து ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்தும் கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமித்திருந்தது.
பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி, கோலியிடம் நாங்கள் கேப்டன் பதவியை தொடரும்படி முடிவை மறுபரீசலனை செய்யுமாறு வலியுறுத்தினோம் என்றும் ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என கூறி இருந்தார். தாங்கள் இதனை தொடர்ந்து வலியுறுத்தியதாகவும் சேத்தன் ஷர்மாவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவது அரைமணி நேரம் முன்பே தான் தன்னிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் கோலி கூறி இருந்தார். இந்த விஷயங்கள் நவம்பர் 18, 2021-ல் நடந்தன.
இந்த விவகாரத்தை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் கோலி விலகி இருந்தார். அவரது பேட்டிங்கும் இதன் பின்னர் விமர்சனத்தை சந்திக்க, ஆசிய கோப்பை மற்றும் டி 20 உலக கோப்பையில் சிறப்பாக ஆடி தான் கிங் கோலி தான் என்பதையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலியும் சமீபத்தில் விலகி, ரோஜர் பின்னி நியமிக்கப்பட, தற்போது சேத்தன் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தேர்வுக் குழுவும் ஒட்டுமொத்தமாக நவம்பர் 18, 2022-ல் நீக்கப்பட்டுள்ளது.
இதனால், கோலி ஒரு நாள் கேப்டன்சி விவகாரம் குறித்தும் தற்போது கங்குலி மற்றும் சேத்தன் ஷர்மா விலகி உள்ளதை குறித்தும் இரு தேதிகளுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.