"கிரிக்கெட்டில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே சம்பளம்"... BCCI செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு.. ஒரு மேட்ச்-க்கு எவ்வளவு ஊதியம்? வெளியானது பட்டியல்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட்டில் இனி ஆடவர் மற்றும் மகளிர்க்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த முடிவை பலரும் வரவேற்று, பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட் அணி, மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் இளையோர் கிரிக்கெட் அணி ஆகிய அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிர்வகித்து வருகிறது. இதில் ஆடவர் கிரிக்கெட் அணியில் இடம் பெறும் வீரர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இருபாலருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,"பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் BCCI-ன் முதல் முயற்சி குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வீராங்கனைகள் அனைவருக்கும் சம ஊதிய கொள்கையைச் செயல்படுத்துகிறோம். பாலின சமத்துவத்தை நோக்கிய இந்திய கிரிக்கெட்டின் நகர்வு இது. இனி ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்படும்" என அறிவித்திருக்கிறார்.
மற்றொரு ட்வீட்டில் அவர்,"ஆடவர் அணியை சேர்ந்த வீரர்களை போலவே வீராங்கனைகளுக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிகளுக்கு ரூ.6 லட்சம் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரூ.3 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். இது மகளிர் கிரிக்கெட்டிற்கான எங்களது அர்ப்பணிப்பு. இதற்கு ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மகளிர் அணி சமீபத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றது. அதன் இறுதி போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்திய மகளிர் அணி. சமீப ஆண்டுகளில் மிகச் சிறப்பாக விளையாடிவரும் இந்திய மகளிர் அணிக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் வெளிவந்திருக்கும் BCCI -ன் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது ஆடவர் மற்றும் மகளிர் அணி பிளேயர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் இந்திய ஆடவர் மற்றும் மகளிருக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read | பெங்களூவில் மசால் தோசை சாப்பிடும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.. வைரலாகும் புகைப்படம்.. !