‘அடிக்கடி காயத்தால் அவதிப்படும் சீனியர் வீரர்’... ‘முன்னாள் சர்ச்சை வீரர் சொன்னது போலவே’... ‘டஃப் கொடுக்கும் நடராஜன்’... ‘இதுக்கும் சான்ஸ் இருக்கு’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் அறிமுகமாகி இருக்கும் தமிழக வீரர் நடராஜன் வரும் நாட்களில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் வெறும் 36 ரன்னிற்கு 9 விக்கெட்டுகளை இழந்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இதற்கிடையில் டெஸ்ட் அணியின் மூத்த பவுலர் ஷமி எலும்பு முறிவு காரணமாக பாதிக்கப்பட்டு, அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் வெளியேறி உள்ளார். இதற்கு முன்பே ஷமி பல முறை காயம் காரணமாக கஷ்டப்பட்டுள்ளார். இடையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு நடக்க முடியாத நிலை கூட உருவாகி உள்ளது.
அப்போது அவர் மீண்டும் கிரிக்கெட்டே விளையாட கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியும், உடல்நிலை குணமாகி இந்திய அணிக்குள் வந்தவருக்கு மீண்டும் அடுத்தடுத்து இரண்டு முறை காயம் ஏற்பட்டது. இதேபோல் புவேனஸ்வர்குமாரும் அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் காயம் காரணமாக அடிக்கடி கஷ்டப்படுவதால் ஒரு வீரருக்கு பதிலாக நடராஜன் கண்டிப்பாக அணிக்குள் வந்து நிரந்தரமாக இடம் பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் அறிமுகப்போட்டியிலேயே யார்க்கரால் தனது திறமையயை நிரூபித்து நடராஜன் அசத்தினார். இதனால் அடுத்த வருடம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார்படுத்தும் வகையில் அணித் தேர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழக வீரர் நடராஜனை விமர்சித்த சர்ச்சை வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கரே, நடராஜனின் பவுலிங் திறமையை கண்டு, ஷமிக்கு இவர் நெருக்கடி கொடுப்பார் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூறினார்.
ஆடும் லெவனில், பும்ரா, நடராஜனை அணியில் சேர்க்கவே இந்தியா அதிகளவில் முயற்சி எடுக்கும் என்றும், இதனால் ஷமிக்கும் தீபக் சாஹாருக்கும் நெருக்கடி ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். கிளென் மேக்ஸ்வெல்லை லென்த் பால் மூலம் அவுட் செய்வதெல்லாம் சாதாரணமான விஷயம் இல்லை என்பதால், காயத்திலிருந்து ஷமி மீண்டாலும் டி20 போட்டியில் பங்கேற்பது கடினம் என்று அவர் கூறியிருந்தார்.
அவர் கூறியது போன்றே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரிலும் கூட நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. டெஸ்ட் தொடரில் இருந்து ஷமி வெளியேறியதால், முகமது சிராஜ், கார்த்திக் தியாகி, நடராஜன் ஆகிய 3 பேரில் ஒருவருக்கு டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஷமிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் நடராஜன் விரைவில் நிரந்தரமாக இடம்பிடிக்க போகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்
