'இதுதான் அன்னைக்கு எங்க குடும்பத்தை காப்பாத்துச்சு’... ‘அதனால இதை எப்பவும் நிறுத்தமாட்டோம்’... ‘நடராஜனின் தாயார் உருக்கம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து எவ்வளவு சம்பாதித்தாலும், நடராஜனின் தாயார், கடந்து வந்த காலத்தை மறக்காமல் சிக்கன் வறுவல் விற்பனை செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், கஷ்டமான சூழ்நிலையிலும், கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் விடாது முயற்சித்து, தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் விளையாடி அசத்தி வந்தார். இதையடுத்து பஞ்சாப் கிங் லெவன் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஐபிஎல் அணிகளுக்காக ஆட தொடங்கினார். இதில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது யார்க்கரால் அசத்தி தோனி, விராட் கோலி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை வீழ்த்தி பிசிசிஐயின் கவனத்தை ஈர்த்தார்.
இதன்மூலம் இந்திய அணியில் இடம் பெற்ற நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நெட் பவுலராக சென்றார். ஆனால் அதற்குள் வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டதால் விளையாடும் பிளேயிங் லெவனில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முத்திரையும் பதித்துவிட்டார்.
தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி அசத்தி வருகிறார். இதனால் அவரது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களது மகன் தற்போது கோடியில் சம்பாதித்து வரும் நிலையிலும், நடராஜனின் தாயார் சாந்தா ஜலகண்டாபுரம் செல்லும் வழியில் சிக்கன் வறுவல் கடை நடத்தி வருகிறார்.
இது குறித்து பேசிய நடராஜனின் தாயார் சாந்தா, ‘குடும்பம் வறுமையில் இருந்த போது எங்களை காப்பாற்றியது இந்த தொழில் தான். என் மகன் தற்போது எவ்வளவு சம்பாதித்தாலும் இந்த தொழிலை நாங்கள் விட மாட்டோம். இந்தத் தொழிலை செய்துதான் என் மகனை கிரிக்கெட் வீரராக்கினோம். அதனால் சாகும் வரை இந்த தொழிலை விடவும் மாட்டோம். நிறுத்தாமல் தொடர்ந்து நடத்துவோம்’ என உணர்ச்சி வசமாக தெரிவித்துள்ளார். நடராஜின் குடும்பம் தற்போது ஒரு நல்ல நிலையில் இருந்தாலும், காலம் மறவாத அவரது தாயார் தனது சொந்த தொழிலை தொடர்ந்து செய்து வருவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மற்ற செய்திகள்
