‘அஸ்வின் இல்லாதது ஆச்சரியமாக இருக்கு’... ‘விராட் கோலியை மறைமுகமாக சாடிய’... ‘பிரபல முன்னாள் கேப்டன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 23, 2019 09:33 AM
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடும் லெவனில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை அணியில் சேர்க்காதது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரீபிய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை வென்றது. இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் கடந்த வியாழக்கிழமையன்று துவங்கியது. இதில் இந்திய லெவன் அணியில், அனுபவ வீரர்களான ரோஹித் ஷர்மா, அஸ்வின், சகா, குல்தீப், உமேஷ் ஆகியோர் ஒதுக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா இடம் பெறாததால் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக டிவி வர்ணனையில் நேரலையில் பேசிய கவாஸ்கர், ‘இந்திய அணித்தேர்வு என்னை மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மிகச்சிறந்த சாதனைகளை சொந்தமாக கொண்டுள்ள அஸ்வின் போன்ற வீரர் விளையாடும் லெவனில் இடம் பெறவில்லை. இது உண்மையிலேயே எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது’ என இந்திய அணித்தேர்வு குறித்து மறைமுகமாக கேப்டன் கோலியை சாடினார்.
இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 11 டெஸ்டில் பங்கேற்றுள்ள அஸ்வின் 60 விக்கெட் 4 சதம் உட்பட 552 ரன்கள் விளாசியுள்ளார். ஒட்டு மொத்த டெஸ்ட் அரங்கில் 65 போட்டியில் பங்கேற்றுள்ள அஸ்வின் 2361 ரன்கள், 342 விக்கெட் கைப்பற்றி ஆல் ரவுண்டாக அசத்தியுள்ளார். அதே போல டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 250 மற்றும் 300 விக்கெட் கைப்பற்றிய பவுலர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் அஸ்வின்.
