‘இந்திய அணிக்கு அச்சுறுத்தல்?’... ‘என்ன நடக்கிறது வெஸ்ட் இண்டீசில்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 19, 2019 10:54 AM

மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய அணி வீரர்கள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக, வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Indian cricket team gets terror threat on PCB email

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக, ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடன், 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் அங்கிருக்கும், இந்திய அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக, தங்களுக்கு இ-மெயில் வந்துள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எந்த பயங்கரவாத இயக்கத்தின் பெயரும் இல்லாமல் வந்த மிரட்டல் இ-மெயிலை,  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-க்கு அனுப்பியுள்ளது.

இந்த இ-மெயில் அங்கிருந்து இந்திய கிரிக்கெட் வாரியமான, பிசிசிஐ-க்கு பகிரப்பட்டதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இது குறித்து பிசிசிஐ செயல் தலைமை அதிகாரி ராகுல் ஜோரி, ‘இது குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். மேலும் மும்பை காவல்துறைக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அதுமட்டுமின்றி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். 

மேலும், இந்த மின்னஞ்சல் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அது புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்யப் போவதில்லை என்று கூறியுள்ள பிசிசிஐ, தேவைப்படும் பட்சத்தில் மேலும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து ஐசிசி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.