‘இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இன்னும்’... 'ஒப்புக் கொண்ட விராட் கோலி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 20, 2019 10:28 PM
ஒரு அணியாக பேட்டிங் வரிசையில் இன்னும் முழு பலம் பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி வென்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக உள்ளது. இதையடுத்து இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் களமிறங்க உள்ளது.
இதுகுறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அறிமுகத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகள் மிகவும் கடினமாக இருக்கும். இந்த சாம்யின்ஷிப் போட்டிகள் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சுவராஸ்யமாக இல்லை என்று ரசிகர்கள் கருதுகின்றனர். என்னைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளின் தரம் மிகவும் உயர்ந்துள்ளது.
மேலும் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களாக அனைவரும் ஒன்றிணைந்து சரியாக விளையாடவில்லை. தனித் தனியாக ஒரு சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் ஒரு அணியாக நாங்கள் பேட்டிங்கில் சிறந்து விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்வது சற்று கடினம் தான். தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்திருப்பதன் மூலம் பேட்டிங் இன்னும் சவாலாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முடிவும் அணியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் பேட்டிங் முக்கியத்துவமானதாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.