"உனக்கு என்னப்பா பிரச்சனை??.." ஹர்பஜனை தப்பாக நினைத்து சீண்டிய ஷேன் வார்னே.. ஆனா, கடைசி'ல நடந்தது தான் 'அல்டிமேட்'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் ஜாம்பவனான ஷேன் வார்னே, கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினையும், வேதனையையும் ஏற்படுத்தியிருந்தது.
தாய்லாந்தில் தன்னுடைய நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க சென்றிருந்த ஷேன் வார்னே, தான் தங்கியிருந்த அறையில் பேச்சு மூச்சில்லாமல் இருக்க, அதிர்ந்து போயினர் நண்பர்கள்.
இறுதியில், வார்னேவை சோதித்து பார்த்த போது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் மறைந்தது உறுதியானது.
இயற்கையான ஒன்று
விடுமுறையில் இருந்த ஒருவர், திடீரென காலமானது, அதிகம் சந்தேகத்தை கிளப்பி இருந்தது. ஆனாலும், பரிசோதனை முடிவுகளில், வார்னேவின் மரணம் இயற்கையான ஒன்று தான் என்பது உறுதியானது. இதனையடுத்து, வார்னேவுடன் ஆடிய கிரிக்கெட் வீரர்கள், கண்ணீருடன் பல உருக்கமான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
டெஸ்ட் தொடர்
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஷேன் வார்னே குறித்த பழைய நினைவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, கடந்த 2001 ஆம் ஆண்டு, இந்தியாவில் வைத்து டெஸ்ட் தொடர் ஒன்று நடைபெற்றிருந்தது. இதில், வார்னேவின் விக்கெட்டை எடுத்து, தன்னுடைய ஹாட்ரிக் விக்கெட் சாதனையை ஹர்பஜன் சிங் படைத்திருப்பார்.
பேட்டிங் செய்த வார்னர்
அப்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறித்து மனம் திறந்த ஹர்பஜன் சிங், "2001 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடந்தது. அதில், சென்னையில் வைத்து நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, ஸ்டீவ் வாக்குடன் இணைந்து வார்னே பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
என்ன ஆச்சு உனக்கு?
நான் அவரை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, என்னை வார்னே பார்த்து விட்டார். என்னை பார்த்து, 'உனக்கு என்ன ஆச்சு?. என்ன பார்த்து கொண்டிருக்கிறாய்?' என என்னிடம் கேட்டார். நான் அவரை ஏதோ செய்யவோ அல்லது அவரிடம் எதையோ சொல்லவோ முயற்சிக்கிறேன் என தவறாக என்னை நினைத்துக் கொண்டார்.
நன்றி சொன்ன வார்னே
அவர் அருகில் சென்று, 'அருகில் இருக்கும் என்னுடைய ஹீரோவை நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. இதனால், உங்களுடன் ஆடிக் கொண்டிருக்கும் இந்த தருணம் மிக அழகானது ஆகும்' என தெரிவித்தேன். இதற்கு அவர் என்னிடம் நன்றியும் சொன்னார். அதில் இருந்து, எங்கள் இருவருக்குள் ஒரு பிணைப்பு உருவானது.
தொடர்ந்து, அந்த தொடரில் நான் 32 விக்கெட்டுகள் எடுத்த போது, என்னை பாராட்டவும் வார்னே தவறவில்லை' என இருபது ஆண்டுகளுக்கு முன் வார்னேவுடன் நடந்த அழகிய தருணத்தினை நினைவு கூர்ந்து நெகிழ்ந்து போயுள்ளார் ஹர்பஜன் சிங்.