"அவர நீங்க பெருமைப்பட வெச்சுட்டீங்க ஜடேஜா.." பல ஆண்டுகளுக்கு முன்பு கணித்த வார்னே.. உருகிப் போன கிரிக்கெட் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, மொஹாலியில் நேற்று ஆரம்பமானது.
இதில், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்த இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரையில், முதல் நாளான நேற்று, ஹனுமா விஹாரி 58 ரன்களும், ரிஷப் பண்ட் 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சாதனை படைத்த ஜடேஜா
தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆட்டத்ததை தொடர்ந்த நிலையில், இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். பிறகு, அஸ்வின் 61 ரன்களில் அவுட்டாக, 9 ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா - ஷமி ஜோடி, 103 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தது. இதில், 175 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்த ஜடேஜா, பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
36 ஆண்டு கால சாதனை முறியடிப்பு
7 ஆம் வரிசையில் களமிறங்கிய இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இதுவரை, முன்னாள் கேப்டன் கபில்தேவ் அடித்த 163 ரன்கள் தான் இருந்தது. அந்த 36 ஆண்டு கால சாதனையை ஜடேஜா தற்போது முறியடித்துள்ளார். அது மட்டுமில்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில், 7-ஆம் வீரராக இறங்கி, மூன்று 100 + பார்ட்னர்ஷிப் சேர்த்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
வார்னேவுக்கு பெருமை
இதனிடையே, மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வார்னேவுக்கு ஜடேஜா பெருமை சேர்த்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 52 வயதான ஷேன் வார்னே, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானான வார்னேவின் மறைவு, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருந்தது. பலரும் கண்ணீர் மல்க, வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல்
2008 ஆம் ஆண்டு, ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்த போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்னே தலைமை தாங்கியிருந்தார். பல இளம் வீரர்களைக் கொண்டு தயாராகி இருந்த ராஜஸ்தான் அணி, முதல் ஐபிஎல் சீசனில், சென்னை அணியை வீழ்த்தி, கோப்பையைத் தட்டிச் சென்றது. அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கு வகித்தவர் ஷேன் வார்னே.
'ராக்ஸ்டார்' ஜடேஜா
அந்த சமயத்தில், 19 வயதே ஆன ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது, ஒரு போட்டியில் ஜடேஜா ஆடியதை பார்த்து, அவரை 'ராக்ஸ்டார்' என வார்னே அழைத்திருந்தார். ஜடேஜாவை பற்றி அப்போதே வார்னே சரியாக கணித்திருந்த நிலையில், தற்போது அவரது மறைவுக்கு மறுநாள், தன்னுடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார் ஜடேஜா.
வைரலாகும் பதிவு
இதனை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜடேஜாவை 'ராக்ஸ்டார்' என நினைவு கூர்ந்ததுடன், வார்னேவை பெருமைப்பட வைத்துள்ளார் என ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.