"உங்கள யாரு இங்க பாக்க வந்தா?.." கங்குலியை கலாய்த்த ஷேன் வார்னே.. அடுத்த ஓவரிலேயே நடந்த 'சம்பவம்'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே, கடந்த சில தினங்களுக்கு திடீரென மறைந்தது, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.

தாய்லாந்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்த வார்னேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவரின் அறையிலேயே திடீரென உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியானது.
பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வார்னேவுடனான பல அழகிய தருணங்கள் குறித்து, கண்ணீர் மல்க நினைத்து உருகி வருகின்றனர். வார்னே காலத்தில் ஆடிய சச்சின், கும்ப்ளே, பாண்டிங் உள்ளிட்ட பலரும் வார்னே குறித்து யாரும் அறியாத பண்பு பற்றி கருத்து தெரிவித்திருந்தனர்.
இயான் சேப்பல்
இன்னும் வார்னேவின் மறைவை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து, வார்னே குறித்த பல விஷயங்களை உணர்வு பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய வீரர் கங்குலியுடன் கடந்த 1999 ஆம் ஆண்டு அடலெய்டு டெஸ்ட்டில் வைத்து வார்னே செய்த ஸ்லெட்ஜிங் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல், வார்னேவின் ஆவண படம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தடுத்து ஆடிய கங்குலி
"கங்குலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அவருக்கு பந்து வீச வார்னே வந்தார். அப்போது நான் ஸ்ட்ரைக் திசையில் சச்சின் நின்று கொண்டிருந்தார். வார்னே வீசும் பந்துகள், அவர் நினைத்தது போல திரும்பாததால், அதனை கங்குலி எளிதாக தடுத்துக் கொண்டே நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார்.
கலாய்த்த வார்னே
இப்படி நான்கு முதல் ஐந்து பந்துகள் நடந்து கொண்டே இருந்தது. உடனடியாக கங்குலியிடம் பேசிய வார்னே, "ஹே, இங்கு இருக்கும் 40,000 ரசிகர்கள் நீங்கள் பந்தினை தடுத்து ஆடும் ஆட்டத்தை பார்க்க வரவில்லை. அவர்கள் சச்சினின் அபாரமான ஷாட்களை பார்க்க வந்துள்ளனர்" என வார்னே கூறினார். இதனைக் கேட்டதும், கடுப்பான கங்குலி, அதற்கு அடுத்த ஓவரில் அடித்து ஆட முயற்சி செய்து, ஸ்டம்பிங் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்" என வார்னே குறித்த ஆவண படம் ஒன்றில் இயான் சேப்பல் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற ஆஸ்திரேலிய வீரர்களைப் போல அதிக அளவில் வார்னே வார்த்தை போரில் ஈடுபட மாட்டார். சில நேரம், கங்குலியிடம் ஈடுபட்டது போல, விக்கெட் எடுக்கும் வேளையில் ஏதாவது பேச்சு கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
