"எந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்கீங்க??.." கொந்தளித்த ரசிகர்கள்.. வருத்தம் தெரிவித்த சுனில் கவாஸ்கர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே, திடீரென மாராடைப்பு ஏற்பட்டு சில தினங்களுக்கு முன் காலமானார்.
அவரின் இந்த திடீர் மறைவு, வார்னேவின் சமயத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இன்னும் வார்னேவின் இழப்பில் இருந்து, பல ஆஸ்திரேலிய வீரர்களால் வெளியே வர முடியவில்லை.
வார்னேவுக்கு இரங்கல்
சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள், வார்னேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதே போல, கிரிக்கெட் ரசிகர்களும் வார்னேவின் சுழல் பந்துகள் தொடர்பான வீடியோக்களை, இணையத்தில் பகிர்ந்து அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
ஷேன் வார்னே பெஸ்ட் இல்ல
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும், வார்னேவின் மறைவு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது பேசிய அவர், "ஷேன் வார்னே ஒரு மகத்தான சுழற்பந்து வீச்சாளர் கிடையாது. என்னை பொறுத்தவரையில், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இலங்கையின் முத்தையா முரளிதரன் தான் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.
நான் அப்படி கூற மாட்டேன்
இந்தியாவுக்கு எதிராக ஷேன் வார்னேவின் சாதனைகள், சுமாராக தான் உள்ளது. இந்திய மண்ணில் வைத்து, ஒரே ஒரு முறை மட்டுமே அவர் 5 விக்கெட் எடுத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. அதனால், வார்னேவை நான் சிறந்த பவுலர் என கூற மாட்டேன்" என சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
விமர்சனம்
சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு முன்னாள் வீரர் இப்படி பேசுவது தவறான ஒன்று என்றும் பலர் தங்களின் விமர்சனத்தை குறிப்பிட்டு வந்தனர்.
வருத்தம் தெரிவித்த கவாஸ்கர்
இந்நிலையில், தான் அப்படி வார்னேவை குறித்து தெரிவித்ததற்கான காரணம் குறித்து, சுனில் கவாஸ்கர் தற்போது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'தொலைக்காட்சியில் என்னிடம், வார்னே சிறந்த ஸ்பின்னரா என்ற கேள்வியை தொகுப்பாளர் முன் வைத்தார். நான் என்னுடைய தனிப்பட்ட மற்றும் நேர்மையான கருத்தினை தெரிவித்தேன்.
இந்த சம்பவத்தை பின்னோக்கி பார்த்தால், அந்த கேள்வி என்னிடம் கேட்கப்பட்டிருக்கக் கூடாது. அல்லது நான் பதிலளித்திருக்க கூடாது. எந்தவொரு ஒப்பீட்டிற்கும், மதிப்பீட்டிற்கும் நான் பதில் சொன்னது, சரியான நேரமே கிடையாது' என தனது பக்கமும் தவறு உள்ள வகையில் சுனில் கவாஸ்கர் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
ஜாம்பவான்களுக்கு இரங்கல்
மேலும், அடுத்தடுத்து மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள், ரோட்னி மார்ஷ் மற்றும் ஷேன் வார்னே ஆகியோருக்கு தனது இரங்கலையும், வீடியோவில் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
வார்னே குறித்து சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்த கருத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கான விளக்கத்தை அவர் தற்போது வருத்தத்துடன் அளித்துள்ளார்.