6 நாட்களுக்குப் பிறகு தாய்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஷேன் வார்ன் உடல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதாய்லாந்தில் மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்திய ஷேன் வார்ன் உடல் 6 நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு வரப் பட்டுள்ளது.
அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி
கிரிக்கெட் உலகம் கண்ட மிகச்சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்ன் 6 நாட்களுக்கு முன்னர் மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தினார். தாய்லாந்தில் நண்பர்களோடு விடுமுறையை கழிக்க சென்றிருந்த வார்னேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவரின் அறையிலேயே திடீரென உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் வெளியாகி கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.
அதிர்ச்சியில் உறைந்த கிரிக்கெட் உலகம்
வார்னின் இந்த திடீர் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்களும் சக வீரர்களும் தங்கள் அஞ்சலிகளை சமூகவலைதளங்கள் மூலமாக செலுத்தி வந்தனர். அவருடன் நெருங்கிப் பழகிய பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வார்னேவுடனான பல அழகிய தருணங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். வார்னே காலத்தில் ஆடிய சச்சின், கும்ப்ளே, கங்குலி, கில்கிறிஸ்ட் மற்றும் பாண்டிங் உள்ளிட்ட பலரும் வார்னே குறித்து யாரும் அறியாத பண்பு பற்றி குறிப்பிட்டு வார்னுக்கு அஞ்சலி செலுத்தினர். வார்ன் இறந்த மறுநாள் நடந்த இந்தியா இலங்கை டெஸ்ட், மற்றும் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆகிய போட்டிகளின் போது வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.
சந்தேகமும் விளக்கமும்
இதனிடையே, ஷேன் வார்னே தங்கியிருந்த அறையில் ரத்த கறைகள் காணப்பட்டதாக தாய்லாந்து காவல் மாகாண காவல்துறை தலைவர் மேஜர் ஜெனரல் சாடிட் போல்பினிட் (Satit Polpinit) தெரிவித்திருந்தது சந்தேகங்களைக் கிளப்பியது. வார்னேவிற்கு உயிர்காக்கும் சிகிச்சையான சிபிஆர் அளிக்கும்போது அவர் இருமியதால் ரத்தப்போக்கு ஏற்பட்ட கரை என்ற விளக்கமளித்தனர். வார்னேவிற்கு அவரது நண்பர் ஒருவர் முதலில் சிபிஆர் செய்து இருக்கிறார். அதன்பிறகு ஒரு அவசரகால மருத்துவ குழு வந்து 10-20 நிமிடங்களுக்கு மற்றொரு சிபிஆர் செய்ததாகவும் பிறகு தாய் சர்வதேச மருத்துவமனையிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவரை அங்கு அழைத்துச் சென்று அவருக்கு ஐந்து நிமிடங்கள் மீண்டும் சிபிஆர் செய்தார்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில் வார்ன் மரணத்தில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று தாய்லாந்து போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
6 நாட்களுக்குப் பிறகு தாய்நாடு வந்த உடல்
இறந்து 6 நாட்களாக பல்வேறு கட்ட விசாரணைகள் மற்றும் விதிமுறைகளுக்காக தாய்லாந்திலேயே வைக்கப்பட்டு இருந்த வார்னின் உடல் இன்று தனியார் விமானம் மூமாக ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கான தனி அஞ்சலி நிகழ்ச்சி அடுத்த வாரத்தி நடக்க உள்ளதாகவும், மார்ச் 30 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்ட்டில்(ஷேன் வார்ன் அதிக விக்கெட்கள் வீழ்த்திய மைதானம்) நினைவஞ்சலி ஒன்று நடத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.