"வாய்ப்பு குடுத்தா தான நிரூபிக்க முடியும்!"... "தோனி எங்களை நடத்துன மாறி, ரிஷப்பை நடத்தாதீங்க!"... "சேவாக் ஆவேசம்!"...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தங்களை நடத்தியது போல், ரிஷப் பண்ட்டை நடத்தினால் அது தவறானது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்குப் பிறகு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அதனால், அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட், தன்னுடைய திறமையை இன்னும் முழுமையாக நிரூபிக்காமல் சொதப்பி வருகிறார்.
இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் நிலை குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "ரிஷப் பண்ட் அணியில் இல்லை என்றால் எப்படி அவர் ரன்களை அடிப்பார். சச்சின் டெண்டுல்கரே ஆனாலும் பெஞ்சில் உட்கார வைத்தால், ரன் அடிக்க முடியாது. அவர் மேட்ச் வின்னராக இருப்பார் என்றால், ஏன் விளையாட வைக்கவில்லை? ஏனெனில் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவதில்லை. ரிஷப் பண்ட்டிற்கு அவரது நிலை குறித்து அணி நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை என்றால் அது தவறானது. சச்சின், கம்பீர் மற்றும் என்னை தோனி எப்படி நடத்தினாரோ அதேபோல் நடத்தக் கூடாது", என்று கூறியுள்ளார்.
மேலும், "2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது, டாப் மூன்று வீரர்கள் (சேவாக், சச்சின், கம்பீர்) மிகவும் மந்தமாக பீல்டிங் செய்வதாக தோனி தெரிவித்தார். ஆனால், அது குறித்து எங்களிடம் அவர் கேட்டதேயில்லை, கலந்து கொண்டதும் இல்லை. மீடியாவில் அவர் பேசிய பிறகுதான் எங்களுக்கே தெரியும். அவர் வீரர்களுடனான கலந்துரையாடலின்போது சொல்லாமல் மீடியாவில் சொன்னார்.
கலந்துரையாடலின் போது, ரோகித் சர்மாவை விளையாட வைக்க வேண்டும் என்பதால் மூவரும் மாற்றி மாற்றி களமிறக்கப்படுவார்கள் என்றுதான் தோனி சொன்னார். ஆனால், மீடியாவில் நாங்கள் மந்தமாக பீல்டிங் செய்வதுதான் வீரர்கள் மாற்றி மாற்றி களமிறக்கப்படுவதற்கு காரணம் என்றார். ஒருவேளை அதேபோல் தற்போது நடந்து கொண்டிருந்தால் அது தவறு". இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.